பதிவு செய்த நாள்
01
பிப்
2016
12:02
திருவண்ணாமலை: வரும் மார்ச் 25ம் தேதி திருவண்ணாமலை யோகிராம் சூரத்குமார் ஆசிரம சன்னதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இது குறித்து ஆசிரம டாக்டர் ராமநாதன் கூறியதாவது: பகவான் யோகிராம் சூரத்குமார் கடந்த, 1918ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம், கங்கைகரையோரம் உள்ள நர்தரா கிராமத்தில் பிறந்தார். பின்னர் ஆன்மிக நாட்டம் கொண்டு, 1952ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு வந்து ரமணரிடம் ஆசி பெற்றார். 1959 முதல் நிரந்தரமாக திருவண்ணாமலையிலேயே தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். 1994ம் ஆண்டு ஆசிரமம் நிறுவும்படி கூறினார். இந்நிலையில் 2001 பிப்ரவரி 20ம் தேதி சித்தியடைந்தார். அவர் சமாதியின் மீது இவ்வூரின் வழக்கப்படி லிங்க பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்பப்பட்டு 2004 ஜூன் 27ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தினசரி பூஜை நடந்து வருகிறது.
தற்போது, 12 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், கடந்த ஓராண்டாக ஆசிரமத்தில் புனரமைப்பு பணிகள் நடக்கிறது. வரும் மார்ச் 25ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில் பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள், மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி, தபோவனம் ஸ்ரீஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமிகள், விட்டல்தாஸ் ஸ்ரீஸ்ரீ ஜய கிருஹஷ்ணதீஷிதர் மற்றும் ஸ்ரீ ரமண சரணதீர்த்தி நொச்சூர் ஸ்ரீ வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 48 நாட்கள் நடைபெற உள்ள மண்டலாபிஷேகத்தில் ஸ்ரீ நொச்சூர் வெங்கட்ராமன் அவர்களின் பாகவத உரை ஒரு வாரமும், மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீமுரளீதர சுவாமியின் சிறப்பு உரைகள் ஒரு வாரமும், ஸ்ரீ விட்டல்தாஸ் ஜய கிருஷ்ண தீஷிதர் நாமசங்கீர்த்தனம், ஆறு நாட்களும் இன்னும் பல சிறப்பு சத்சங்கங்களும் நடக்க உள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் ஆசிரம தலைவர் ஐஸ்டீஸ் டி.எஸ். அருணாசலம் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.