பதிவு செய்த நாள்
16
ஆக
2011
10:08
தர்மபுரி: தர்மபுரி அருகே, காந்திக்கு கோவில் கட்டிய முதியவர், ஏழ்மை நிலையிலும் சுதந்திர தின விழாவை, சிறுவர்களுடன் கொண்டாடினார்.தர்மபுரியை அடுத்த பென்னாகரம் யூனியனுக்கு உட்பட்ட, அதகப்பாடி ஊராட்சியில் உள்ள ஏரிக்கோடியை சேர்ந்தவர் குமரன், 65. படிப்பறிவு இல்லாத, தச்சு தொழில் செய்யும் இவருக்கு, சுதந்திர போராட்டங்கள், காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து, இவரது தந்தை சிறுவயதில் கூறியதை கேட்டு, காந்தியின் மீது பற்று ஏற்பட்டது; அவரையே கடவுளாக வணங்கினார்.தான் மட்டும் வணங்குவதை விட, பலரும் வணங்க வேண்டும் என விரும்பி, காந்திக்கு கோவில் கட்ட, 18 ஆண்டுக்கு முன் முடிவு செய்தார். உறவினர், ஊர் மக்கள் ஆதரவு இருந்தும், நிதி திரட்டுவது பெரும் சிரமமாக இருந்தது.எனவே, செக்கோடிபுரத்தில் அவருக்கு சொந்தமாக இருந்த நிலத்தை, 1.20 லட்ச ரூபாய்க்கு விற்று, ஏரிக்கோடியில் நிலம் வாங்கினார். அந்நிலத்தில், ஓட்டு வீட்டை கட்டி கொண்டதோடு, அருகில், 30 ஆயிரம் ரூபாயில் மகாத்மா காந்திக்கு கோவில் கட்டினார். இவர், தினமும் கற்பூரம் ஏற்றி பூஜை செய்வதோடு, இவரது மனைவி கோவிந்தம்மாளும் பூஜை செய்து வழிபடுகிறார்.காந்தி ஜெயந்தி, காந்தி நினைவு தினம், சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவுக்கு, ஊர் மக்களை அழைத்து விழா நடத்தி, தேசிய கொடியேற்றி காந்தியை வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று காலை, சுதந்திர தின கொடியேற்றி வைத்து, காந்திக்கு சிறப்பு பூஜை செய்து, குமரன் வழிபட்டார்.காலில் அடிபட்டு சிகிச்சை பெற்ற நிலையில், இந்த ஆண்டு மிக எளிமையாக சுந்திர தினத்தை கொண்டாடியது, வேதனை அளிப்பதாக, குமரன் கூறினார்.