பதிவு செய்த நாள்
02
பிப்
2016
10:02
சபரிமலை : சபரிமலையில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநில சுற்றுலாத்துறை 100 கோடி ரூபாய் செலவில் தயாரித்த திட்டத்துக்கு
மத்திய அரசு முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளது. மத்திய சுற்றுலா அதிகாரிகள் சபரிமலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சபரிமலை வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வரும் நிலையில், கேரள அரசு சுற்றுலாத்துறை இதற்காக ஒரு திட்டம் தயாரித்தது. சபரிமலை பக்தி சுற்றுலா சர்க்கியூட் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் 99.88 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சன்னிதானம், பம்பை, எருமேலி ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய பணிகள் இதில் உட்படுத்தப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் புதிய அரவணை காம்ப்ளக்ஸ், தரிசன கியூவில் நிற்பவர்களுக்கு ஓய்வெடுக்கும் வசதி, குடிநீருக்காக தண்ணீர் சுத்திகரிப்பு பிளான்ட், பக்தர்கள் தங்கும் இடம் அமைத்தல், போதுமான கழிவறை மற்றும் குளியலறை அமைத்தல் ஆகியவை உட்படுத்தப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் முன்புறம் உள்ள ஆழிகுண்டம் புனரமைக்கப்படும். பம்பை- சன்னிதானம் செல்லும் வழியில் கான்கிரீட் மாற்றப்பட்டு கற்கள் பதிக்கப்படும். இங்கு எட்டு மெடிக்கல் பாயின்டுகள், 13 இடங்களில் குளியலறை மற்றும் கழிவறை அமைக்கப்படும். ஆங்காங்கே குடிநீர் பிளான்டுகள் நிறுவப்படும். சோலார் மூலம் மின்விளக்கு வசதிகள் செய்யப்படும். மாநில அரசு பரிந்துரை செய்த இந்த திட்டத்துக்கு மத்திய அரசு கொள்கை ரீதியான அனுமதி வழங்கியது. நேற்று மத்திய பக்தி சுற்றுலா திட்ட அதிகாரி வைபவ், தொழில் நுட்ப வல்லுநர்கள் ஜெகநாதன், கணேஷ், திட்ட மேலாளர் உதயகுமார், கேரள சுற்றுலாத்துறை இணை இயக்குனர் மோகனன், தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் பம்பை, சன்னிதானம், எருமேலியில் ஆய்வு நடத்தினர்.