பதிவு செய்த நாள்
02
பிப்
2016
10:02
தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில், வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், நெருக்கடியில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாகவும், ஹாலோஜன் விளக்குகள், ஸ்பிரிங்ளர், போன்ற பல்வேறு அம்சங்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பகோணத்தில், வரும், 13ம் தேதி கொடியேற்றத்துடன் மகாமக விழா துவங்குகிறது; முக்கிய விழாவான தீர்த்தவாரி, 22ம் தேதி நடை பெறுகிறது.
தடுப்பு கம்பிகள்: அப்போது, பல லட்சம் பக்தர்கள் மகாமக குளத்தில் நீராடுவர் என்பதால், பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிரமமின்றி செல்லும் வகையில், 2,000 தடுப்புக்கம்பிகள் தயார் செய்யப்பட்டு வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மகாமக குளத்திற்கு வரும் தண்ணீர் பாதை, அரசலாற்றிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் பூமிக்கு அடியில் வருகிறது. குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை, பிரம்மாண்டமாகக் காட்டுவதற்காக யாழி முகத்துடன் சிமென்டால் உருவம் செய்யப்பட்டு, அதன் வாயிலிருந்து தண்ணீர் வருவது போல் வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குளத்தின் கரையோரங்களில், 20 ஸ்பிரிங்ளர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மகாமக குளத்தின் நான்கு திசைகளிலும், உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படுகின்றன.
400 பல்புகள்: ஒவ்வொரு கோபுரத்திலும், 100 பல்புகள் இருக்கும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மகாமக குளத்தில் மட்டும், 400 ஹாலோஜன் பல்புகள் பொருத்தப்படுகின்றன. இதுபோல, பொற்றாமரை குளத்தில், 100 பல்புகள் வீதம், நான்கு திசைகளிலும், 400 பல்புகள் அமைக்கப்படுகின்றன. குளத்திற்கு வரும் சாலைகளில் பக்தர்கள் நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, தடுப்பான் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பான், 8 அடி உயரத்தில், 2, 3 வாசல்கள் கொண்டதாக அமைக்கப்படுகிறது. முக்கிய சாலைகளில், 26 இடங்களில் இந்த தடுப்பான் அமைக்கப்படுகிறது.