பதிவு செய்த நாள்
02
பிப்
2016
10:02
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே லாந்தையில் ஊரணி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோயில் இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோயிலில் சிவன் மூலவராக இருந்துள்ளார். அதனருகே விநாயகர், நாகர் சிலைகள் இருந்துள்ளன. கோயில் வளாகத்தில் பழமையான வில்வமரம் இருந்துள்ளது. இந்த கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த கோயிலை கி.பி., 1162 ல் படையெடுத்து வந்த இலங்கை படையினர் சிதைத்துள்ளனர். கி.பி., 14 ம் நுாற்றாண்டில் படையெடுத்து வந்த முகலாயர்கள் சிதைத்ததாக சிலர் கூறுகின்றனர். அவர்கள் கோயிலில் இருந்த லிங்கம், விநாயகர், நாகர் சிலைகளை அருகே இருந்த ஊரணிக்குள் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
1984ல் கிராமமக்கள்: சிலைகளை மீட்டுள்ளனர். முழுமையாக சிதிலமடைந்த விநாயகர் சிலையை ஊரணிக்குள்ளேயே விட்டுவிட்டனர். லிங்கம், நாகர் சிலைகளுடன் புதிதாக விநாயகர் சிலைைய-யும் சேர்த்து அதேபகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். இதனை ஆய்வு செய்த கீழக்கரையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு கூறியதாவது: பெரிய அளவில் சிவன் கோயில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. இந்த கோயிலில் இருந்து லிங்கம், விநாயகர், நாகர் சிலைகள் மட்டுமே கிடைத்துள்ளன. வேறு எந்த சிலைகளும் கிடைக்கவில்லை. லிங்கத்தின் அடியில் ஆவுடை (வட்ட வடிவம்) கிடையாது. நந்தியும் இல்லை. கி.பி., 900ல் பல்லவ மன்னர் அபராஜிதன் காலத்திற்கு பின்பே லிங்கம் அடியில் ஆவுடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. விநாயகர் சிலை ராஜலீலா ஆசனத்தில் மணற்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது, என்றார்.