பதிவு செய்த நாள்
16
ஆக
2011
11:08
பொள்ளாச்சி : ராமாயணக்காவியத்தின் கதையை, ஓலைச்சுவடியில் ஓவியத்தில் வரைந்து அசத்தியுள்ளார் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜோதிடர். தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும், ஓலைச்சுவடியில் இருந்து கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ் இலக்கியங்களை, ஓலைச்சுவடிக்குக் கொண்டு செல்கிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர். பொள்ளாச்சி, டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிடர் தெய்வசிகாமணி கூறியதாவது: பொள்ளாச்சி பகுதியில் நிறைய பனை மரங்கள் உள்ளன. இவை வெட்டப்படும் இடங்களுக்கு சென்று, குறுத்து ஓலையை எடுத்து, மஞ்சள் தடவி பதப்படுத்துகிறேன். ஓலைச்சுவடிகள் நன்கு பதப்படுத்தப்பட்ட பின், எழுத்தாணி கொண்டு எழுதுகிறேன். எழுத்துக்கள் மீது மீண்டும் மஞ்சள் தடவுவதால், எளிதாக படிக்கும் வகையில் அவை பளிச்சிடுகின்றன. கடந்த ஆண்டு உலக பொதுமறையான திருக்குறளை, ஓலைச்சுவடியில் எழுதினேன். திருக்குறளில் உள்ள, 1,330 குறள்களையும் ஓலைச்சுவடியில் எழுதினேன். மொத்தம், 43 கட்டுகளாக ஓலைச்சுவடியை பிரித்துள்ளேன். ஒவ்வொரு கட்டிலும், 30 குறள்களை எழுதியுள்ளேன். ஓலைச்சுவடியில் ஒருபக்கத்தில் திருக்குறளும், மறுபக்கத்தில் அதற்கான பொருளும் எழுதியுள்ளேன். இரண்டு கட்டுகளில் மட்டும், 50 குறள் இடம்பெற்றுள்ளன.
திருக்குறள் எழுதி முடித்ததும், ராமர் கோவிலில் ராமாயண பஜனை பாடல்களை பாடிய அனுபவம் உள்ளதால், ராமாயணத்தை எழுத முடிவு செய்தேன். இதற்காக, 18 அங்குல நீளம் மற்றும், 2.5 அங்குல அகலத்தில் பனை ஓலைகளை தயார் செய்தேன். ராமாயணத்தில் உள்ள, பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்த காண்டம், உத்தரகாண்டம் ஆகிய ஏழு காண்டங்களில் வரும் சம்பவங்களுக்கு தகுந்தாற்போன்று, சித்திரங்களை ஓலைச்சுவடியில் வரைந்துள்ளேன். தினமும், 10 ஓலைகளில் ராமாயணம் எழுதுகிறேன். கடந்த நான்கு மாதங்களில், முதல் இரண்டு காண்டங்களை எழுதி முடித்துள்ளேன். இன்னும் ஓராண்டில் அனைத்து காண்டங்களையும் எழுதி முடித்து விடுவேன். இப்பணிகள் முடிந்ததும், மகாபாரதம் எழுத முடிவு செய்துள்ளேன். அரசும், தமிழ் இலக்கியத்துறையும் ஊக்குவித்தால், தமிழ் இலங்கியங்கள் அனைத்தும் ஓலைச்சுவடியில் மறுபடிவம் செய்ய தயாராக உள்ளேன். இவ்வாறு, ஜோதிடர் தெய்வசிகாமணி கூறினார்.