பதிவு செய்த நாள்
16
ஆக
2011
11:08
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையார் ஆலய 125 வது ஆண்டுவிழா நடந்தது. வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையார் ஆலயம் ஐரோப்பிய கோத்திக் கட்டட கலை முறைப்படி கட்டப்பட்டதாகும். இந்த ஆலயம் கட்டி 125 வது ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி ஒரு கோடிக்கும் மேல் செலவில் ஆலயம் செப்பனிடப்பட்டு கடந்த 6ம் தேதி 125வது ஜூபிலி விழாவும், பரலோக மாதா திருவிழாவும் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் அதிகாலை சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை ஜெபமாலை பிரார்த்தனை, மறையுரை, நற்கருணை, மறையுரை ஆகிய நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் பீற்றர் பர்னாந்து தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி, முதல் திருவிருந்து ஆகியவை நடந்தது. கூட்டு திருப்பலி நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் ஸ்டீபன், கோமஸ், ஆஸ்வால்ட், ஜெர்மானுஸ், ரூஸ்வால்ஸ், ஜூரோசின், சுரேஷ், ஜெயஜோதி, உதயகுமார், கருமாத்தூர் அருளானந்த கல்லூரி முதல்வர் சேவியர் வேதம், இயேசு சபை குருக்கள் உப்பட ஊர் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். பின்னர் மாலை கார்மேல் மாதா தேரில் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து கார்மேல் மாதா தேர்பவனி நடந்தது. இன்று விழா நிறைவு நிகழ்ச்சியும், ஜூபிலி விழா மலர் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வீரபாண்டியன்பட்டணம் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை அமல்ராஜ் மற்றும் ஜூபிலி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.