பதிவு செய்த நாள்
03
பிப்
2016
12:02
புதுடில்லி: பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான மஹாராஷ்டிராவில் உள்ள, சனி ஷிங்னாபூர் கோவிலின் கர்ப்பகிரஹத்திற்குள், பெண்கள் நுழைய கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த மரபு காப்பாற்றப்பட வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குரல் கொடுத்துள்ளது. அதே நேரத்தில், அந்த மாநிலத்தை சேர்ந்த, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என நேற்று கூறியுள்ளார்.
● இந்த விவகாரத்தில், கோவிலுக்குள் நுழைய விரும்பும் பெண்கள் சார்பில் போராட்டம் நடத்தி வரும் பெண்கள் அமைப்பு மற்றும் பெண்களுக்கு அனுமதி மறுக்கும், கோவில் நிர்வாகம் இடையே பேச்சு நடத்தவும், அதில் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தவும் தயாராக இருப்பதாக, வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்
● இந்த பிரச்னை குறித்து, இம்மாதம் 16க்குள் பதிலளிக்குமாறு, மாநில அரசுக்கு, மும்பை உயர்நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் மரபுகள், காப்பாற்றப்பட வேண்டும் என்ற வகையில், சனி கோவிலின் மரபுகளும் தொடர வேண்டும். இப்படித் தான் சபரி மலையிலும், 10 - 50 வயது பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இது போன்ற ஹிந்து மத விவகாரங்கள் தான் நடுநிலையாளர்கள் என, கூறிக் கொள்ளும் சிலரின் விவாதப் பொருளாக மாறிவிட்டது. இது, வேதனையளிக்கிறது.
ஆர்கனைசர் ஆர்.எஸ்.எஸ்., இதழின் தலையங்கம்
கடவுள், ஆண் - பெண் என பிரித்துப் பார்ப்பதில்லை; மனிதர்கள் தான், அவ்வாறு பிரித்து வைக்கின்றனர். கோவிலுக்குள் செல்ல, ஆண் - பெண் வேறுபாடு இருக்கக் கூடாது. கடவுளே அவ்வாறு பிரிவினைவாதம் பேசினால், அவர் கடவுள் அல்ல. சரத் பவார் தலைவர் தேசியவாத காங்கிரஸ்