பதிவு செய்த நாள்
03
பிப்
2016
12:02
உவரி: திருநெல்வேலி மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் ராஜகோபுர திருப்பணி இன்று துவங்குகிறது. உவரி கடற்கரையில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. பிட்டுக்கு மண் சுமந்து திருவிளையாடல் நிகழ்த்தியவர் சிவன். இதை நினைவுபடுத்தும் வகையில், இங்கு கடலில் இருந்து, மண் சுமந்து வந்து சிவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இங்கு கடலே தீர்த்தமாக இருக்கிறது. இங்கு தரப்படும் சந்தனத்தை நோயாளிகள் பூசி நிவாரணம் பெறுகின்றனர். இங்குள்ள சுயம்புலிங்கம், தானாக பூமியில் இருந்து தோன்றியது. வேறு எந்த சிலைகளும் பிரகாரத்தில் கிடையாது. வைகாசி விசாகத்தன்று சுவாமி மகர மீனுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி சிறப்பானது. இந்தக் கோவிலில், ராஜகோபுரம் கட்ட முடிவு செய்து, திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டது. 108 அடி உயரத்தில், ஒன்பது நிலையுடன் இந்த கோபுரம் அமையும். திருப்பணி விழா இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. ராஜகோபுரம் கட்டும் இடத்தில் கருபேழை மற்றும் அஸ்திவார முதல் கல் வைக்கப்படும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், திருப்பணி கமிட்டி கவுரவ தலைவர் லங்கால் லிங்கம், தலைவர் முருகேசன், செயலர் வெள்ளையா நாடார், பொருளாளர் செண்பகவேல் நாடார் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.