மயிலாடுதுறை: பிப்.8ல் நிகழும் தை அமாவாசை மிகவும் விசேஷமான நாளாகும். அன்று இரண்டு முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என மயிலாடுதுறை வேதபாடசாலை முதல்வர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த ஆண்டு தை அமாவாசை மகோதய புண்ணிய காலமாக வருகிறது. தைமாத அமாவாசை, திருவோண நட்சத்திரம் மற்றும் வியதீபாதயோகம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமையில் கூடினால் அர்த்தோதய புண்ணியகாலம் என்று அழைக்கப்படும். இதுவே திங்கள்கிழமையில் கூடினால் மகோதய புண்ணியகாலம் எனப்படும். இது ஒரு அபூர்வமான சேர்க்கை. பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற அமைப்பு கூடும்.
இந்நாளில் கோவில்களில் சிறப்பு தீர்த்தவாரி, சுவாமி புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். முன்னோர்களுக்கு உதய காலத்தில் ஒருமுறையும், பிறகு வழக்கம் போல் அமாவாசைக்காக ஒருமுறையும் தர்ப்பணம் செய்ய வேண்டும். கடல், நதி அல்லது திருக்குளங்களில் நீராடி செய்யும் தர்ப்பணத்திற்கு அதிக புண்ணியம் கிடைக்கும்.அபூர்வமான மகோதய புண்ணிய காலத்தில் தெய்வ வழிபாடும், முன்னோர் தர்ப்பணங்களும் செய்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். நமது முன்னோர் 21 தலைமுறையினர் கடைத்தேறுவார்கள்.
அவர்கள் ஆசியால் பித்ருதோஷம் நீங்கி வீட்டில் மங்களங்கள் நிகழும். வம்சவிருத்தி உண்டாகும். நோய்கள் நீங்கும். இதுபற்றிய விபரங்கள் நிர்ணயசிந்து என்ற நுாலில் உள்ளது,” என்றார்.