பதிவு செய்த நாள்
06
பிப்
2016
12:02
கும்பகோணம்: வரும், 14ம் தேதி, கும்பகோணம் மகாமக விழாவிவை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், ஆதீனங்கள், துறவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அகில இந்திய விசுவ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் செயல் தலைவரும், தமிழ்நாடு விசுவஹிந்து பரிஷத்தின் நிறுவன தலைவருமான வேதாந்தம், நேற்று கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கும்பகோணம் மகாமக விழாவில், மடாதிபதிகள், சன்னியாசிகள் புனித நீராட உள்ளனர். கோவில் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது. கோவிலுக்காக தனிவாரியம் அமைக்கவேண்டும். அரசு துறை அதிகாரிகள் நிர்வாகத்தை கண்காணிக்கத்தான் வேண்டும். கோவில் வழிபாடு, பூஜை முறைகள், ஆகமவிதிகளில் அரசு தலையிடக்கூடாது. வரும், 14ம் தேதி கும்பகோணம் வீரசைவ மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், தருமபுரம், மதுரை, திருவாவடுதுறை ஆதீனங்கள், காசிமடாதிபர், திருக்கருங்குடி ஜீயர், சிதம்பரம் மவுனகுரு உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், ஆதீனங்கள், துறவியர்கள் ஆகியோர் சந்திப்புக்கான ஏற்பாடுகளை விசுவ ஹிந்து பரிஷத் செய்துள்ளது. மகாமக நேரத்தில் கும்பகோணம் நகரமே ஆன்மிகத்தை ஊக்குவிக்கும் விதமாகத்தான் இருக்கவேண்டும். சிவசிவ, நமசிவாய, நமோ நாராயணாய என்ற வாசகங்களும், காவி கொடியும் கொண்ட பேனர்கள் 2,000 இடங்களில் அமைக்கப்படும். மகாமகம் மகிமை பற்றி ஆறு பக்கங்கள் கொண்ட புத்தகம், விசுவஹிந்து பரிஷத் சார்பில் வழங்கப்படும். விழாவில் கும்பகோணம் வியாபார இடமாக மாறிவிடக்கூடாது. ஆன்மிக சிந்தனையை உருவாக்கும் இடமாக அமையவேண்டும். மகாமக திருவிழாவிற்கு முக்கிய காரணமாக திகழ்பவர் கோவிந்த தீட்சிதர். அவருக்கு மகாமக குளத்தில் சிலை வைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.