பதிவு செய்த நாள்
09
பிப்
2016
05:02
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நதி கோதவரி. இதன் நீளம் 1465 கி.மீட்டர். மகாராஷ்டிராவின் த்ரியம்பகத்திற்கு அருகே பிரம்மகிரி மலையில் கோதாவரி உற்பத்தியாகிறது. அருகில் த்ரியம்பகேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோதாவரியின் புனிதத்தை நாசிக்கில் உணரலாம். நாசிக் ராமகுண்டத்தில் கோதாவரி புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் விசேஷம்! இந்த புஷ்கரத்தில் ஐந்து கோடி மக்கள் பங்கு கொண்டு ஸ்நானம் செய்வர் எனக் கூறப்படுகிறது! நாசிக் பகுதியில் ராமர், லட்சுமணர் மற்றும் சீதை ஆகியோர் நீண்ட காலம் வசித்துள்ளனர். நாசிக்கின் பழைய பெயர் பஞ்சவடி! கோதாவரி மகாராஷ்டிராவில் உற்பத்தியானாலும் ஆந்திரா, தெலுங்கானா வழியாகப் பயணித்து, கடைசியில் அந்தர் வேதியில் கடலில் சங்கமமாகிறது. இந்த அந்தர் வேதியை சென்னை - விஜயவாடா... நரசாழர் வழியாக அடையலாம். இங்குள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் பார்க்க வேண்டிய ஒன்று. இதேபோல் ஆந்திராவில் பத்ராசலகோதாவரி ஸ்நானமும் மிகவும் விசேஷம். இங்கு ஒரு கோடி பேருக்கு மேல் புஷ்கரலு வருடம் முழுவதும் ஸ்நானம் செய்து சதுர்புஜராமர், சீதா மற்றும், லட்சுமணனை தரிசிப்பதை பெரும் பேறாகக் கருதுவர்!
கோதாவரிக்குக் கிழக்கில் ராஜ மந்திரி உள்ளது! ராஜ மந்திரியில் புஷ்கரலு மிகச் சிறப்பாகும்! ஒரு சமயம்... இந்தப் பகுதி பல காலம் மழையின்றி வாடிக் கிடந்தது. அப்போது மக்கள், அங்கு அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த கவுதமரிடம் சென்று மழை பெய்து வளம் கொழிக்க உதவ வேண்டும் எனக் கோர அவரும், உடனே மழையைக் கொட்டச் செய்து சுபிட்சம் அளித்தார். இதனை நினைவூட்டும் வகையில் இந்த ஊரில் புஷ்கரலு 12 நாட்கள் மிகச் சிறப்பாக நடக்கிறது. புஷ்கரலு சமயம் ராஜ மந்திரி வேணு கோபால் சுவாமி, கோடிலிங்கேஸ்வரர் மார்க்கண்டேய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கோதாவரியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாபுஷ்கரணி நடத்தப்படுகிறது. அது இந்த வருடம் ஜுலை மாதம் துவங்கி ஒரு வருடம் நடக்கிறது. இந்த வைபவத்தின் முதல் 12 நாட்களும் கடைசி 12 நாட்களும் விசேஷமானவை..
முதல் 12 நாட்களை ஆதிபுஷ்கரம் எனவும், கடைசி 12 நாட்களை அந்திய புஷ்கரம் எனவும் அழைத்து மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இது சமயம் பித்ருகாரியங்கள். சிறப்பு உபன்யாசங்கள், பக்திப் பாடல் நிகழ்வுகள்... சிறப்புக் கலை நிகழ்ச்சிகள் என அமர்க்களப்படுகிறது. புஷ்கர் என்றால் என்ன? 12 வருடங்களுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் ஒரு வருடம் வாசம் செய்கிறார். அது சமயம் அந்த நதியில் புஷ்கர் என்ற தெய்வமும் குடி கொண்டு.. ஸ்நானம் செய்பவர்களின் பாவங்களைக் களைந்து, துன்பங்களை விலக்கி நல்வாழ்க்கைக்கு உதவுகிறது...! இத்துடன் சகல வியாதிகளும் குணமாகி விடும் என்பது நம்பிக்கை! தெலுங்கில் புஷ்கரத்தை புஷ்கரலு.... புஷ்கரா என அழைக்கின்றனர். கடைசியாக 2003-ல் இந்த விழா நடந்தது. இந்தியாவில் 12 நதிகளில் புஷ்கரம் விசேஷம்....! குறிப்பிட்ட ராசியில் குரு நுழைந்தது. ஒரு வருடம் வாசம் செய்கிறார். இனி அந்த நதிகளையும் அது சார்ந்த ராசி..
நதி ராசி
கங்கை மேஷம்
நர்மதா ரிஷபம்
சரஸ்வதி மிதுனம்
யமுனா கடகம்
கோதவரி சிம்ஹ
கிருஷ்ணா கன்யா
சங்குதீர்த்தம் கன்யா
(திருக்கழுக்குன்றம் வேத
கிரீஸ்வரர் கோயில்) துலா
காவேரி விருச்சிகம்
பீமா விருச்சிகம்
தாமிரவருணி தனுசு
தப்தி (புஷ்கர வாகினி) மகரம்
துங்கபத்ரா சிந்து (இந்து) கும்பம்
பிரான்ஹீதா மீனம்
தமிழ்நாட்டில் தாமிரவருணி, தெற்கு வடக்காக ஓடுகிறது. இதில் பாண தீர்த்தம், பாபநாசம், திருபுடைமருதூர் மற்றும் சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் புனித ஸ்நானம் விசேஷம். சுத்த மல்லியில் உள்ள தாமிரபரணி கோயிலும் விசேஷம். ராஜமந்திரி சென்னையிலிருந்து 560 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஹைதராபாத்திலிருந்தும் வரலாம்- தூரம் 510 கிலோ மீட்டர். ஆந்திர அரசு ஜுலை -15-ம் தேதியை அதிகாரபூர்வ ஒரு நாள் புஷ்கர நிகழ்ச்சியாக அறிவித்துள்ளது. ஆனால் பக்தர்களைப் பொறுத்தவரை ஒரு வருடமும் விசேஷம். சென்னை - ஹவுரா ரயில் பாதையில் ராஜ மந்திரி அமைந்துள்ளது. ராஜ மந்திரியிலிருந்து எட்டு கி.மீட்டர் தொலைவில் கொவ்வூரு உள்ளது. ராஜ மந்திரியிலிருந்து பஸ்ஸில் செல்லலாம்.
கவுதம ரிஷி இங்குதான் ஆஷ்ரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் வயலில், ஒரு பசு மாடு புகுந்து அட்டூழியம் செய்து கொண்டிருந்தது. அதனை கண்ட கவுதம ரிஷி, குச்சியால் அதனை அடிக்க பசு மாடு மாண்டு போனது. இதனால் அவர் கோஹத்தி தோஷத்திற்கு உள்ளானார்.
தோஷம் நீங்க கவுதம ரிஷி, பிரம்ம கிரிமலை அருகே கடும் தவத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் த்ரியம்பகேஸ்வரராக சிவன் காட்சியளித்தபோது, அவர் தலையிலிருந்து நீர் பிரவாகமாக வெளிப்பட ஆரம்பித்தது. அதனை கீழே விழும் முன் பிடித்த கவுதமர், நேராக, தன்னுடைய கொவ்வூரு பகுதிக்கு வந்து, இறந்த மாட்டின் மீது தெளிக்க அது உயிர் மீண்டு எழுந்தன. இதே சமயம் பிரம்மகிரி மலையில், கோதாவரியின் உற்பத்தி துவங்கியது. கவுதமர், ஒரு பசுவுக்காக தவம் இருந்து சிவனின் அருளால், நதி உற்பத்தியானதால் கோதாவரி என பெயர் பெற்றன. கோதாவரிக்கு கவுதமி எனவும் மறு பெயருண்டு.
கோதாவரியை தட்சண கங்கை என அழைக்கின்றனர். கோதாவரி, ஓடும் பாதையில் பசாரா உள்ளது! இங்கு கரையில் ஞான சரஸ்வதிக்கு கோயில் உள்ளது. கரீம்நகர் ஜில்லாவில் காளீ ஸ்வரம்.. கரீம் நகர் ஜில்லாவின் தர்மபுரி....கிழக்கு கோதாவரி ஜில்லாவில் கோவூர் மேற்கு கோதாவரி ஜில்லாவில் பட்டி சீமா ஆகிய பகுதிகளும் கோதாவரி புஷ்கர ஸ்நானத்திற்குப் பேர் பெற்ற ஊர்கள்! கோதாவரியில் எங்கு ஸ்நானம் செய்தாலும் விசேஷம் எனக் கூறப்பட்டாலும் ராஜ மந்திரி.... கொவ்வூரு.... பத்ராசலம் ஆகியவை மேலும் புனித இடங்களாகக் கருதப்படுகின்றன!