சிவ வழிபாட்டின் தலைநகராகக் கருதப்படுவது காசி. சுயம்பு லிங்கம், ஜோதிர்லிங்கம் என்ற நிலைகளில் முதன்மை பெறுவதும் இத்தலம் தான். நம் ஊர்களில் உள்ள கோவில்களைக் கூட காசிக்கு சமமானது என்றும், காசிக்கு வீசம் அதிகம் என்றும் உதாரணமாகக் கொள்வதற்குக் காரணம் அதன் ஒப்புயர்வற்ற மகிமை தான். தேவர்களும் சிவனருள் பெற காசிக்கு வந்து தவமிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. காசியில் இறக்க முக்தி என்பர். அதற்காக எல்லாரும் காசியில் தங்கி இறப்பை நாடுவது என்பது முடியாத ஒன்று. வாழ்நாளில் ஒருமுறை காசி சென்று வந்தால் போதும். எப்போது இறந்தாலும் முக்தி தான். அதாவது இப்பிறவியில் நலமாய் வாழ்ந்து தெய்வத் திருவருள் மற்றும் முன்னோர் ஆசிபெற காசி யாத்திரை ஒருமுறையேனும் செல்வது அவசியம்.