பதிவு செய்த நாள்
18
பிப்
2016
11:02
மீஞ்சூர்: மீஞ்சூர் வரதாஜ பெருமாள் கோவிலின் புதிய தேரின் பணிகள், இரு ஆண்டுகளாகியும் முடிவடையாமல் இருப்பதால், இந்த ஆண்டு பிரம்மோற்சவத்திற்குள் முடிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். வடகாஞ்சி என்று அழைக்கப்படும் மீஞ்சூரில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், வைகாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள், தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கோவிலில் இருந்த தேர், சிதிலமடைந்ததால், தேரோட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில், தேரோட்டம் நடத்த பொதுப்பணித் துறை தடை விதித்தது. அதன்பின், பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பழுதடைந்த தேரை, தற்காலிகமாக சீரமைத்து, பலத்த பாதுகாப்புடன் தேரோட்டம் நடத்தப்பட்டது.
ரூ.1 கோடியில்...: பழைய தேருக்கு மாற்றாக, 45 அடி உயரத்தில், 1 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தேரை உருவாக்கும் பணிகள் 2014ல் துவங்கின. பெரும் கொடையாளர்கள், முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள் மூலம் நிதி பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. தேரை நிறுத்துவதற்கான கட்டடமும் ஓராண்டிற்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த, 2015ம் ஆண்டு, ஜூன் மாதம், பிரம்மோற்சவம் முடிந்தவுடன், புதிய தேர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. தேரின் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, புதிய கட்டடத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பின், நிதி ஆதாரமின்றி பணிகள் முடங்கியதாக கூறப்படுகிறது.
சிக்கல் : வரும், மே 25ம் தேதி, பிரம்மோற்சவ விழா துவங்கவுள்ளது. அப்போது பழைய தேரை பயன்படுத்த, பொதுப்பணித் துறை அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால், புதிய தேர் பணிகளை முடிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, தேர் பணிகளை மேற்கொள்ளும் குழுவினர் கூறுகையில், தேர் கட்டுவதற்கான பணிகளை முடிக்க, கொடையாளர்களிடம் நிதி வசூலித்து வருகிறோம். தேவையான மரங்களை வாங்கி விட்டோம். ஓரிரு நாளில், பணிகளை துவக்கி விடுவோம். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் புதிய தேர் உலா வரும் என்றனர்.