கோவை: பெரியகடை வீதி, கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நாட்டிய நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மார்ச் 7 வரை நடக்கும் இத்திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று ஹரி கலாஷேத்ரா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி, மாலை, 6:30 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, 7:30 மணிக்கு நடந்த திருவீதி உலாவில் அம்மன் புலி வாகனத்தில் பக்தருக்கு அருள்பாலித்தார். அடுத்ததாக, இன்றைய சூழ்நிலையில் மனிதநேயம் வளர்ந்துள்ளது! தளர்ந்துள்ளது! எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. பேராசிரியர் புனிதா நடுவராக பங்கேற்க, கவிஞர் மகேஸ்வரி சற்குரு, சித்ரா, உமா மகேஸ்வரி, சகுந்தலா ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.