பதிவு செய்த நாள்
02
மார்
2016
11:03
சிவாலயங்களில் பெரும்பாலும், சிவனும், அம்பாளும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியிருப்பர். திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், இருவருக்கும் மத்தியில், ஆறுமுகங்களுடன் சுப்ரமணியர் எழுந்தருளியுள்ளார். இத்தகைய அமைப்பு கொண்ட ஆலயங்களை, "சோமாஸ்கந்த ரூபாலயம் என, அழைப்பர். அதாவது, சிவன், பார்வதிக்கு மத்தியில் சுப்ரமணியர் எழுந்தருளும் அமைப்பே, "சோமாஸ்கந்த ரூபாலயம் என்பதாகும். சிவாலயங்களில் திருவிழாக்கள், தேரோட்டம், திருவீதி உலா ஆகியவற்றில், தவறாமல் உற்சவர் சோமாஸ்கந்த ரூபத்தில் எழுந்தருளி, வீதி உலா செல்வது வழக்கம். இங்கோ, ஆலயமே சோமாஸ்கந்த ரூபத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியே பட்டி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு. பிரமாண்டமான கற்களால் உருவாக்கப்பட்டுள்ள மதில் சுவர், ராஜகோபுரம், வெளிபிரகாரம், முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், உட்பிரகாரம் என, எல்லாமே அற்புதமான வடிவமைப்பில் அமைந்துள்ளன. தற்போது, மதில் சுவர்கள் மீது கோபுரம், சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தலத்தில், ஒரே மண்டபத்தில், மூன்று கருவறைகள் வரிசையாக அமைந்துள்ளன. மூன்று சன்னதிகளுக்கும், தனித்தனி கோபுரங்கள் உள்ளன. லிங்க ரூபத்தில் சிவன்; தாய், தந்தையருக்கு மத்தியில் சுப்ரமணியர்; மூன்றாவதாக, இடதுபுறத்தில் விசாலாட்சி அம்பிகை எழுந்தருளி, சோமாஸ்கந்த ரூபாலயமாக திகழ்கிறது.
சிவன் எழுந்தருளியுள்ள கருவறை கோபுரம் பெரியதாகவும், சுப்ரமணியர், அம்பாள் கோபுரங்கள், அற்புதமான சுதை வேலைப்பாடு, புராண கதைகளை உணர்த்தும் சிலைகள், சுவாமிகளின் அவதாரங்கள் என ஒவ்வொன்றும், அழகுறவும், மிக நேர்த்தியாகவும் உள்ளன. கோவில் கருவறைக்கு முன், பெரும்பாலும் கஜலட்சுமி, இருபுறமும் யானை சிற்பங்கள் காணப்படும். இங்கு, மூலவர் கருவறைக்கு முன், கஜலட்சுமிக்கு இருபுறமும், விநாயகரும், சுப்ரமணியரும் உள்ளனர். சோமாஸ்கந்த ரூபாலயத்தோடு, கருவறை நிலவில் எழுந்தருளியுள்ள சுவாமியின் அமைப்பு, மிகவும் சிறப்பானது. இறைவனின் வாகனமான நந்தி, ஒரே கல்லில், பிரதோஷ நந்தியாக செதுக்கப்பட்டுள்ளது, மற்றொரு சிறப்பம்சம். இந்த ஆலயத்தில், தர்ம சொரூபமாக நந்தி தேவர் எழுந்தருளியுள்ளார். அதாவது, சமயம், விகாரம், சந்தோஷம், சாதுசங்கமாகிய நான்கு குணங்களையும், நான்கு கால்களாக கொண்ட நந்தி மீது, எம்பெருமான் எழுந்தருளியுள்ளார். இந்த நான்கு வகை ஆத்ம குணங்களையும் கொண்ட உயிர்களிடத்து, இறைவன் எழுந்தருளி, அருள்பாலிப்பார் என்ற தத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தவே, நந்தி தேவர் இவ்வாறு எழுந்தருளியுள்ளார். பிரதோஷ காலங்களில், இறைவன் நந்தி மீது எழுந்தருளி அருள்பாலிப்பார் என்பதால், இக்கோவிலில் நந்திக்கு நடைபெறும் அபிஷேகம், மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அற்புதமான நந்தி தேவர் அமைப்பும், சுவாமியின் கருவறைக்கு முன்பு, உலோக நந்தி மற்றும் பலி பீடமும் காணப்படுகிறது. மூன்று சன்னதிகளுக்கு முன்பு, கல்தரையில், அற்புதமான சிற்ப வேலைப்பாட்டில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, மலர்ந்த தாமரை பூ வடிவம் பொலிவூட்டுகிறது. அதுமட்டுமா? ராசிகள் அனைத்தும், இங்குள்ள இறைவனின் கண் அசைவில் இயங்குகின்றன.