பதிவு செய்த நாள்
03
மார்
2016
11:03
பவானி: பவானி, செல்லியாண்டியம்மன்-மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு வேடங்கள் அணிந்து உற்சாகமாக கொண்டாடினர். ஈரோடு மாவட்டம், பவானி நகரின் காவல் தெய்வமான செல்லியாண்டியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பவானி செல்லியாண்டியம்மன், எல்லையம்மன், மாரியம்மன் கோவில்களின் பொங்கல் விழா, கடந்த மாதம் 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 23ம் தேதி மாரியம்மனுக்கு கம்பம் நடப்பட்டது. மார்ச் 1ம் தேதி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனின் கருவறை சென்று புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல் நேற்று காலை, 10 மணிக்கு செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து துவங்கியது. புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள எல்லையம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சக்தி அழைப்பு நிகழ்ச்சி மதியம், 12 மணியளவில் தொடங்கி செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு மாலை, 5 மணிக்கு சென்றடைந்தது. இதில், பவானி, சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல வண்ணங்களில், பல வகையான வேடங்கள் அணிந்தும், தங்களின் உடம்பில் சேறு பூசி ஊர்வலமாக சென்றனர். அப்போது வழிநெடுகிலும் உள்ள பெண்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் மீது உப்பு மிளகு, வாழைப்பழம், காய், கனிகள், தண்ணீர் பாக்கெட், குளிர்பானம், பிஸ்கட், மிட்டாய், புது துணிகள், பேனா உட்பட பல்வேறு வகையான பொருட்களை வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை அலகு குத்தியும், அக்னி சட்டி ஊர்வலமும் நடந்தது.