பதிவு செய்த நாள்
03
மார்
2016
01:03
ஈரோடு: கள்ளுக்கடை மேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, கள்ளுக்கடை மேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த பிப். 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி, கொடியேற்றம், பால்குடம் ஊர்வலம், வெகுவிமர்சியாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை தொடங்கியது. கடந்த, 15 நாட்களாக, காப்புகட்டி, மஞ்சள் ஆடை உடுத்தி, விரதம் கடைபிடித்து வந்த பக்தர்கள், மூன்று நாட்களுக்கு முன்பாகவே குண்டம் இறங்கும் வரிசையில் காத்திருந்தனர். நேற்று அதிகாலை, 5 மணிக்கு, கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அதன் பின்னர் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்கினர். கோவிலில் காப்பு கட்டி பதிவு செய்திருந்த, 10 ஆயிரம் பேருக்கு மேல் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என பலரும் கை குழந்தைகளுடன் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டபடியே, குண்டத்தில் இறங்கி ஓடினர். தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், இரவு உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீயணைப்பு துறையினர், மருத்துவ குழுவினர், பாதுகாப்பு பணியில் இருந்தனர்.