பதிவு செய்த நாள்
09
மார்
2016
11:03
அய்யாவாடி, மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நேற்று, நிகும்பலா யாகம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த அய்யாவாடி கிராமத்தில், மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் அமைந்துள்ளது. எட்டு திசையும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோவிலில், ராவணன் மகன் மேகநாதனும், பஞ்ச பாண்டவர்களும் அம்மனை பூஜித்து, வேண்டிய வரங்களை பெற்றனர் என்பது ஐதீகம். இந்த கோவிலில், மாதந்தோறும் அமாவாசையன்று, மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் பிரசித்தி பெற்றது. இதில் பங்கேற்று பிரார்த்தனை செய்தால், சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று காலை, கோவில் மண்டபத்தில் அம்மனுக்கு பூஜைகள் நடந்தன. மதியம், 1:00 மணிக்கு, 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத, யாக குண்டத்தில் மிளகாய் வற்றல், பட்டு புடவைகளை போட்டு, நிகும்பலா யாகத்தை, தண்டபாணி குருக்கள் நடத்தினார். அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணத்தில் இருந்து அய்யாவாடிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.