கடலூர் : வேளாங்கன்னி மாதாக் கோவில் விழாவில் பங்கேற்க சென்னையைச் சேர்ந்த ஏராளமானோர் கடலூர் வழியாக பாதயாத்திரை செல்கின்றனர். வேளாங்கன்னி மாதா ஆலயத் திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. 8ம் தேதி வரை நடக்கும் திருவிழாவில் தினமும் திருப்பலி நடக்கிறது. ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் இந்த விழாவில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இந்து மதத்தினர் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து பங்கேற்பது வழக்கம். பல பக்தர்கள் பாதயாத்திரை சென்று தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். மத வேறுபாடின்றி பாதயாத்திரை மேற்கொள்ளும் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால், சீர்காழி வழியாக வேளாங்கன்னி செல்கின்றனர். ஆங்காங்கே உள்ள கோவில்கள், ஆலயங்கள், பிளாட்பாரங்கள், பூங்காக்களில் இரவு நேரங்களில் தங்கி மறுநாள் புறப்பட்டுச் செல்கின்றனர்.