பதிவு செய்த நாள்
14
மார்
2016
12:03
தேர்தலை காரணம் காட்டி, இந்து அறநிலையத்துறை பாக்கித் தொகை கொடுக்காமல் இழுத்தடிப்பதால், பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான பட்டாபிராமர் சுவாமி, தற்போது கடனாளியாக நிற்கிறார். பாகூர் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரத்தில் பழமை வாய்ந்த சீதா சமேத பட்டாபிராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. கடந்த ஆண்டு 35 லட்ச ரூபாய் செலவில், இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. புனரமைப்பு பணிக்காக, இந்து அறநிலைய துறை 24 லட்ச ரூபாய் வழங்குவதாக ஒப்புக்கொண்டது. இதில், 15 லட்ச ரூபாய் மட்டுமே, அறங்காவலர் குழுவினரிடம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 லட்ச ரூபாய் இதுவரை வழங்கப்படவில்லை. அறநிலைய துறையின் நிதி கிடைக்காததால், கும்பாபிஷேக பணிக்காக செலவிடப்பட்டுள்ள தொகை பெருமளவு கடனாகவே உள்ளது.
அதுமட்டுமின்றி, கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் மற்றும் கடைகள் அப்படியே கிடப்பதால், ஆக்கிரமிப்புகளுக்கு ஆட்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தின் மூலம் வர வேண்டிய குத்தகை பாக்கியும் சரிவர வரவில்லை. இதனால், பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான பட்டாபிராமர் சுவாமி, தற்போது கடனாளியாக நிற்பதாக பக்தர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். கும்பாபிஷேக பணிக்காக கடன் கொடுத்தவர்கள், அறங்காவலர் குழுவினருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மேலும், கோவிலுக்கு எந்த வருவாயும் இல்லாததால், சுவாமிக்கு தினசரி பூஜை, கூட செய்வது கடினமாக உள்ளது. இந்து அறநிலைய துறை வழங்க வேண்டிய தொகை, தேர்தலை காரணம் காட்டி மறுக்கப்படுகிறது என்று அறங்காவலர் குழுவினர் புலம்பி வருகின்றனர். பாகூர் தொகுதியில் அமைச்சர் தியாகராஜன், ராதாகிருஷ்ணன் எம்.பி., என பவர்புல் நபர்கள் இருந்தும், இந்து அறநிலைய துறை வழங்க வேண்டிய 9 லட்ச ரூபாயை பெற்றுத்தர முயற்சி எடுக்காததால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, கடனாளியாக நிற்கும் பட்டாபிராமர் சுவாமி கோவிலுக்கு, இந்து அறநிலைய துறை வழங்க வேண்டிய, 9 லட்ச ரூபாய் நிதியை, உடனே வழங்க முன்வர வேண்டும். - நமது நிருபர் -