சபரிமலையில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2016 10:03
சபரிமலை: சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவுக்காக நேற்று முன்தினம் மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறந்தார். தொடர்ந்து கொடியேற்றத்துக்கான சுத்திகிரியைகளை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நடத்தினார். இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை நான்கு மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்யதரிசனம் மற்றும் அபிஷேகத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை ஆரம்பித்து வைத்தார். பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சுவாமி தரிசனம் நடத்தினர். காலை 9.30 மணிக்கு நெய்யபிஷேகம் நிறுத்தப்பட்டு கொடியேற்றத்துக்கான சடங்குகள் தொடங்கியது. கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் தந்திரி சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் கொடிப்பட்டம் கோயிலுக்குள் எடுத்து செல்லப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கொடிமரசுவட்டில் பூஜைகள் நடத்திய பின்னர் 10.40மணிக்கு கொடியேற்றப் பட்டது. அப்போது பக்தர்கள் சரணகோஷம் முழக்கினர். தொடர்ந்து 11 மணி முதல் 12 வரை மீண்டும் நெய்யபிஷேகம் நடைபெற்றது. பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனைக்கு பின்னர் இரவு ஒன்பது மணிக்கு பூதபலி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முதல் 22-ம் தேதி வரை தினமும் பகல் 11.30 மணிக்கு உற்சவபலி நடக்கிறது. 23-ம் தேதி பம்பையில் ஆராட்டு நடக்கிறது. அன்று இரவு ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும் கொடி இறக்கப்பட்ட பின்னர் பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.