பதிவு செய்த நாள்
16
மார்
2016
12:03
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, கலச வழிபாட்டு பூஜைகள் இன்று துவங்குகிறது.பொள்ளாச்சி பகுதியில் பழமை வாய்ந்த அம்மன் ஆலயங்களில் முக்கியமானது சூலக்கல் மாரியம்மன் கோவில். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 21 ஆண்டுகளுக்குப்பின், திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு, வரும் 18ம் தேதி, காலை 6.30 - 8.00 மணிக்குள் கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது. இத்திருவிழாவின் முதல் நாளான இன்று, மாலை, 5.30 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் கலசவழிபாடு, பிள்ளையார் வழிபாடு, திருமகள் மற்றும் ஐம்பூத வழிபாடு மற்றும் பெரும் பேரொளி வழிபாடு நடக்கிறது. இரவு, 7.30 மணிக்கு காப்பு அணிவித்தல், சிலை சக்திகளை திருக்குடங்களில் எழுந்தருளச்செய்து யாகசாலை பிரவேசம், முதற்கால யாகம், மலர் வழிபாடு ஆகியன நடக்கிறது.நாளை காலை, 6:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கும் திருவிழா, தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜை, விமான கலசம் நிறுவுதல் நடக்கிறது.
நாளை (மார்ச் 17), 4:30 மணிக்கு, 27 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. தேர் வெள்ளோட்டம் நிறைவடைந்ததும், மாலை, 6:30 மணிக்கு மூன்றாம்கால யாகபூஜை துவங்குகிறது. வரும் வெள்ளியன்று, அதிகாலை, 4:30 மணிக்கு மங்கள இசையை தொடர்ந்து, நான்காம்கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து, காலை, 6:30 - 8:00 மணிக்குள், மாரியம்மன் - விநாயகர் கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகமும், அன்னதானமும் நடக்கிறது.