பதிவு செய்த நாள்
16
மார்
2016
12:03
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, நாளை துவங்குகிறது; 22ல் தேரோட்டம் நடக்கிறது. நாளை இரவு, 8:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன், விழா துவங்குகிறது. இரவு, 10:00க்கு கிராமசாந்தி, 11:00க்கு கொடியேற்றம், காப்பு கட்டுதல், அம்மன் புறப்பாடு நடக்கிறது. வரும், 17 முதல், 20 வரை, தினமும் அபிஷேகம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். வரும், 20ம் தேதி, மாலை, 4:30க்கு மஞ்சள் நீர் கிணறு நிரப்புதல்; இரவு, 8:30க்கு பரிவட்டம் கட்டுதல், திருக்கல்யாணம், வீரமக்களுக்கு காப்பு அணிவித்தல் நடக்கிறது.
வரும், 21 காலை, 11:00க்கு, குண்டம் திறப்பு, பூ வார்த்தல்; இரவு, 7:00க்கு சக்தி வேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், வீர மக்களுக்கு எண்ணெய் வழங்குதல்; இரவு, 9:00க்கு படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், படைக்கலம் எடுத்தல் நடக்கிறது. அன்றிரவு, 10:00 மணிக்கு, குதிரையுடன் படைக்கலம் புறப்படுதல்; நள்ளிரவு, 1:00க்கு பரிவார மூர்த்திகள், கன்னிமார், கருப்பராயன், மூனிஸ்வரன், கோவிலுக்கு சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் உள்ளிட்டவை நடக்கிறது.வரும், 22 அதிகாலை, 4:00 மணிக்கு குண்டம் இறங்குதல், 8:00 மணிக்கு குண்டம் மூடுதல்; அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம், பிற்பகல், 3:30 மணிக்கு துவங்குகிறது. 23 முதல், 26 வரை, தினமும் அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது; 26 காலை, 11:00 மணிக்கு மகா தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் நாகராஜ், தக்கார் அழகேசன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.