பதிவு செய்த நாள்
16
மார்
2016
12:03
அவிநாசி : ""உடலாலும், உள்ளத்தாலும் பிறருக்கு தீங்கு செய்யாமல், தர்மத்தின்படி வாழ்வதே வாழ்க்கை, என, உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் பேசினார்.
திருமுருகன்பூண்டி பேரூராட்சி, தேவராயன்பாளையத்தில், அறிவுத்திருக்கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில், மயிலானந்தன் பேசிய தாவது: மக்களுக்கு தத்துவ மற்றும் இறை ஞானத்தை போதிக்கும் வகையில், கிராமங்களில் ஆன்மிக புரட்சி அமைதியாக நடந்து வருகிறது. கற்றுக்கொடுப்பவர்களும், கற்பவர்களும் பயனடையும் ஒரே பயிற்சி மனவளக்கலை. எல்லா மதங்களுமே அன்பை போதிக்கின்றன. எல்லோருமே தெய்வீக மனிதர்களே. மதம் கடந்த இறை தத்துவத்தை, மகரிஷி நமக்கு அளித்துள்ளார். அவர் கூறியபடி வாழ்ந்தால், எந்த நாளும் மகிழ்ச்சியே. இன்று நல்லது செய்தால், நாளை நமக்கு நல்லது நடக்கும். உடல் பாதுகாப்பு, மன வளம் ஆகியவற்றை போற்றினால், பிரச்னை வராது. கோடி கோடியாய் பணம் ஈட்டினாலும், மனவளக்கலை பயிற்சியில் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.இப்பிறவியின் நோக்கம், பிறருக்கு தொண்டாற்றுவதே. தர்மப்படி பணம் சம்பாதித்து, குடும்பத்தை சந்தோஷமாக நடத்தி, நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும். தர்மப்படி வாழ்வதே மிகச்சிறந்த வாழ்க்கை. இதற்கு நேர்மை மிகவும் முக்கியம். ஒழுக்கம், நேர்மை, நாணயம் உள்ள பண்பாளர்களை பார்ப்பது, அரிதாகி வருகிறது. மக்களிடம், நற்சிந்தனை நாளும் விதைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
துணை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். துணை தலைவர் நாகராஜ், அறிவுத்திருக்கோவில் கட்ட நிலம் தானமாக வழங்கிய நல்லசாமி, பேரூராட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர்.திருப்பூர் மண்டல தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்றார். சுசீலா இறைவணக்கம் பாடினார்.நாகராஜ், தவம் இயற்றினார். கிராமிய சேவை திட்ட மண்டல துணை தலைவர் கந்தசாமி நன்றி கூறினார்..