பதிவு செய்த நாள்
18
மார்
2016
11:03
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மனுக்கு, 21 ஆண்டுகளுக்குப்பின் இன்று கும்பாபிஷேகம் பெருவிழா நடக்கிறது. முன்னதாக நேற்று மாலை, முக்கிய வீதிகள் வழியே புதுத்தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் பழமை வாய்ந்த திருத்தலம் சூலக்கல் மாரியம்மன் கோவில். சுயம்பு வடிவில், சூலத்துடன் காட்சி தரும் மாரியம்மனுக்கு, 21 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது. சூலக்கல்லை சுற்றியுள்ள 18 கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, கோவில் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு, கடந்த 16ம்தேதி முதல் யாக பூஜைகள் நடந்து வருகின்றன.
இன்று அதிகாலை, 4:30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. தொடர்ந்து நான்காம் கால யாக பூஜையும், திருமுறை விண்ணப்பம் மற்றும் பெரும் பேரொளி வழிபாடு நடக்கிறது. இன்று, காலை, 6:30 – 8:00 மணிக்குள் மாரியம்மன், விநாயகருக்கு மகா கும்பாபி÷ ஷக பெருவிழா நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடக்கிறது. கோவில் செயல்அலுவலர் மணிகண்டன் மற்றும் பணியாளர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கும்பாபிஷேக திருவிழா பணியை முன்னின்று நடத்துகின்றனர். முன்னதாக, நேற்று மாலை, 4:30 மணிக்கு ,கோவில் திருவிழா தேரோட்டத்துக்காக, 27.5 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக தேர் வடிவமைக்கப்பட்டது. இப்புதிய தேரின் வெள்ளோட்டம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகவும், கோவிலைச்சுற்றியும் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. பொதுமக்களும், அம்மன் பக்தர்களும் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, மூன்றாம் கால யாக பூஜையும், திருமுறை விண்ணப்பமும், இரவு அஷ்ட பந்தன மருந்து சாத்துதலும் நடந்தது.