பதிவு செய்த நாள்
21
மார்
2016
12:03
திருச்சி அருகே, மண்ணில் புதைந்திருந்த, சோழர் கால சண்டிகேஸ்வரர் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த சுண்டைக்காய் கிராமத்தில், முசிறி அண்ணா அரசு கலைக் கல்லுாரியின் வரலாற்றுத் துறை தலைவரும், உதவிப் பேராசிரியர்களும் ஆய்வு செய்தனர். அப்போது, பாதிக்கு மேல் மண்ணில் புதைந்திருந்த, சோழர் கால சண்டிகேஸ்வரர் சிலையை கண்டறிந்தனர். சிலையை ஆய்வு செய்த டாக்டர் கலைக்கோவன் கூறியதாவது:இது, 10ம் நுாற்றாண்டு கால சிலை. 92 செ.மீ., உயரம், 58 செ.மீ., அகலம், 15 செ.மீ., தடிமன் உடையது. சடைப்பாரம் என்ற அமைப்பில், தலை அலங்காரமும், தொடையளவு சுருக்கிய இடையாடையும் கொண்டுள்ளது. ஒரு காலை மடித்து இருக்கையில் அமர்த்தி, மறுகாலை கீழ் இறக்கிய நிலையில், சுகாசனத்தில் சண்டிகேஸ்வரர் அமர்ந்துள்ளார்.
கீழிறங்கிய வலதுகால், மண்ணில் புதைந்துள்ளது. சிலையின் வலது காதில், அணிகலன் இல்லாமலும், இடது காதில், கனமான பனையோலைக் குண்டலமும், முப்புரிநுால், இடைப்பட்டை, தாள்செறி, கைவளை, கழுத்தில் அகலமான அலங்காரச் சரப்பளியும் காணப்படுகின்றன. வலது கையில் மழு ஏந்தி, இடது கையை தொடை மீது இருத்தி, பொலிவான உருண்டை முகமும், செறிவான உடலமைப்பும் கொண்டுள்ள, இந்த சிற்பம் இங்கு கண்டறியப்பட்டதை அடுத்து இப்பகுதியில் சோழர் காலக் கோவில் ஒன்று இருந்து, காலப்போக்கில் மறைந்து போனதைக் காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -