பதிவு செய்த நாள்
21
மார்
2016
12:03
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த கமலத் தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில், முக்கிய நிகழ்வான கமலத் தேர் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தர், அலங்கரிக்கப்பட்ட கமலத் தேரில் எழுந்தருளினார். பின், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் பச்சை கொடி அசைத்து, கமலத்தேரை துவக்கி வைத்தனர்.
மாட வீதிகளில் திருவீதியுலா வந்த தேர், பகல், 1:30 மணிக்கு காளியம்மன் கோவில் வளாகத்தில் நின்றது. அங்கு, திருவாலங்காடு கிராம பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில், பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின், மாலை, 3:30 மணிக்கு கமலத்தேர் அங்கிருந்து புறப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று காலை, 9:00 மணிக்கும், இரவு, 10:00 மணிக்கும் நடராசர் பெருமானுக்கு திருக்கல்யாணம் அபிஷேகம் நடக்கிறது.