பதிவு செய்த நாள்
23
மார்
2016
10:03
பழநி: பழநியில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கொடுமுடி தீர்த்தக் காவடிக்கு பெயர் பெற்ற பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு ஈரோடு, காங்கேயம், திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடி, பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில் முத்துகுமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. பழநி பங்குனி உத்திரவிழா மார்ச் 17ல் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி மார்ச் 26 வரை நடக்கிறது. விழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி,தெய்வானையுடன் தங்கமயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் வலம் வருவர்.முக்கிய நிகழ்ச்சியான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. முத்துகுமார சுவாமி, வள்ளி,தெய்வானையுடன் காலையில் தந்தப்பலக்கில் சன்னதிவீதி, கிரிவீதிகளில் வலம் வந்தார். சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், யாகபூஜைகள் செய்து இரவு 8.20 மணிக்கு ருக்கல்யாணம் நடந்தது.இரவு 9.30 மணிக்கு திருமணக்கோலத்தில் முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் சன்னதிவீதி, கிரிவீதியில் திருவுலா வந்தார்.இன்று மலைக் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு நான்கு கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்துள்ளனர்.