பதிவு செய்த நாள்
23
மார்
2016
10:03
அனுப்பர்பாளையம் : பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில், புகழ்பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 16ல், கொடியேற்றத்துடன் குண்டம் தேர்த்திருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்குதல் மற்றும் தேர்த்திருவிழா, நேற்று நடைபெற்றது. அதிகாலை, 4:00 மணிக்கு, குண் டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள படைக்கல சாவடியில் பொங் கல் வைத்து, படைக்கலம் கொண்டு வரப்பட்டது. பரிவார மூர்த்திகளான கன்னிமார், கருப்பராயன், முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு, அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது; காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, பூசாரி திருமூர்த்தி, விநாயகமூர்த்தி ஆகியோர், குண்டம் இறங்கி, துவக்கி வைத்தனர். தொடர்ந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, ஆயிரகணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கினர். அதன்பின், உப்பு, மிளகு போடுதல் மற்றும் பொங்கல் வைத்தல், மொட்டை போடுதல், கரும்பு படைத்தல் போன்ற வேண்டு தல் நடைபெற்றன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. பிற்பகல், 2.00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் சிம்ம வாகனத்தில் தேரில் எழுந்தருளல்; மாலை, 3.30 மணியளவில், தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர், அவிநாசி, பல்லடம், குன்னத்தூர், நம்பியூர், கோபி, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆன்மிக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.