சில ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலத்தில் பாயும் ஷல்மாலா ஆற்றின் நீர் வடிந்தது. இதனால் இது நாள்வரை நீரில் மூழ்கியிருந்த கருங்கல்லில் வடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் வெளியில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தன. கணக்கற்ற சிவலிங்கங்கள் இங்கு காணப்படுவதால் இந்த இடம் சஹஸ்ரலிங்கம் என அழைக்கப்படுகிறது. தற்போது இப்பகுதி பிரபல ஆன்மிகத் தலமாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சஹஸ்ரலிங்கங்களை வழிபடுகின்றனர். ஒவ்வொரு சிவலிங்கத்திற்கும் முன் ஒரு நந்தி சிற்பமும் உள்ளது சிறப்பு. சஹஸ்ரலிங்கம் உள்ள பகுதி வட கர்நாடகம், சிர்ஷியிலிருந்து எல்லாப்பூர் செல்லும் பாதையில் 17-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. ஹல்கோல் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ. நடந்து சென்று இந்த சஹஸ்ரலிங்கங்களை தரிசிக்க வேண்டும்.