பதிவு செய்த நாள்
24
மார்
2016
01:03
ஆத்தூர்: கோவை மாவட்டம், கவுசிகா நதிக்கரையில், 1,800 ஆண்டுகள் பழமையான, தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, அரசு கல்லூரி தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் கூறினார். கோவை மாவட்டம், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர் செல்வராஜ் என்பவர், கவுசிகா நதியின் வடக்கு கரையில், இரண்டு ஏக்கர் நிலத்தின் மேற்பரப்பில், மண்பாண்ட ஓடுகளை சேகரித்தார். அவைகள் ஆத்தூர் அரசு கலைக்கல்லூரி, வரலாற்று பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சிவராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.
இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது: செங்காவி பூச்சு பூசப்பட்ட மட்கல பாகத்தின் கீழ் பகுதியில், அ-ந்-த-ய் என, நான்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன. இவை, இரண்டாம் நூற்றாண்டை சார்ந்தது. அந்தை என்ற சொல், மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டில் உள்ளது. கவுசிகா நதிக்கரையில் கிடைத்துள்ள அந்தய் என்ற பெயர் உள்ளவரின் உரிமை பொருளாக மட்கலன் இருந்துள்ளது. இதே பகுதியில், கருப்பு, சிவப்பு நிற மட்கல ஓடு கிடைத்துள்ளது. நொய்யல் ஆற்றில் கலக்கும் கவுசிகா நதிக்கரையில், கி.பி., இரண்டாம் நூற்றாண்டு, தமிழ் பிராமி மட்கல ஓடு கிடைத்துள்ளதால், இந்த நதிக்கரை நாகரிக தளமாக விளங்கியுள்ளது. மேலும், இங்கு வசித்த மக்கள், கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. கொங்கு மண்டலம், கிரேக்க மற்றும் ரோமானியர்களோடு நேரடி வணிக தொடர்பு கொண்ட பகுதியாக இருந்தது. கொடுமணல் பகுதியில் நடந்த ஆய்வில், தமிழ் பிராமி எழுத்துக்களுடன் மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.