பதிவு செய்த நாள்
24
மார்
2016
01:03
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவிலில், பங்குனி உத்திர தேர்திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஆத்தூர் அருகே, வடசென்னிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, காலை, 6 மணியளவில், 108 பால் குடம் அபிஷேகம் நடந்தது. மாலை, 4.20 மணியளவில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாக கட்டளைதாரர்கள், மேளதாளத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். கோவில் வளாகத்தை சுற்றி, பக்தர்கள் உற்சாகத்துடன் தேர் இழுத்து சென்றனர். அப்போது, நிலத்தில் விளைவிக்கப்பட்ட நெல், கடலை போன்ற தானியங்களை தேர் மீது வீசியெறிந்து வழிபாடு செய்தனர். விழாவில், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.