பதிவு செய்த நாள்
24
மார்
2016
01:03
தர்மபுரி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள முருகன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணியர் கோவில், ஜெகதேவி முருகன் கோவில், தேவிரஹள்ளி மற்றும் சுண்டாகப்பட்டி, மருதேரி, போச்சம்பள்ளி, மத்தூர் அடுத்த அத்திப்பள்ளம், பர்கூர் ஆகிய முருகர் கோவிலில்களில் நேற்று காலை சிறப்பு அபி?ஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதனையடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடனாக அலகு குத்தி, தேர் இழுத்து வந்தனர். அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற, கோவில்களில் விடப்பட்ட சேவல்கள், மாட்டு கன்றுகள் போன்றவை ஏலம் விடப்பட்டன. இதையடுத்து கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல், தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். இதையொட்டி வான வேடிக்கை நடந்தது. தர்மபுரி நெசவாளர் நகர் சக்திவிநாயகர் வேல்முருகன் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருவீதி உலா நடந்தது.