பதிவு செய்த நாள்
24
மார்
2016
01:03
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுந்தனர். ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தேரோட்ட திருவிழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி இரவு, 9 மணிக்கு, மயில் வாகன உற்சவம், 19ம் தேதி, நாகவாகன உற்சவம், 20ம் தேதி நந்திவாகன உற்சவம், 21ம் தேதி ரிஷப வாகன உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 9 மணிக்கு, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து யானை வாகன உற்சவத்தில், திருவீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை, 10 மணிக்கு நடந்தது. கலெக்டர் கதிரவன், சப்-கலெக்டர் செந்தில்ராஜ், தாசில்தார் தியாகராஜன், எம்.எல்.ஏ., கோபிநாத், தி.மு.க., நகர செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலை, 4.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, 24 சி.சி.டி.வி., கேமரா மூலம் கண்காணிப்பு பணி நடந்தது. 370 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பலர், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில், ஆங்காங்கு அன்னதானம் வழங்கினர். இன்று (மார்ச் 24)இரவு, 10 மணிக்கு பல்லக்கு உற்சவ நிகழ்ச்சியும், நாளை (25) இரவு, 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. வரும், 30 ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது.
பேனர் வைக்க தடை: ஓசூரில் ஆண்டுதோறும் நடக்கும் தேர்த்திருவிழாவின் போது, அரசியல் கட்சிகள் சார்பில் பேனர் வைக்கப்படுவதால், பெரும் நெருக்கடி ஏற்பட்டது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், இந்த ஆண்டு பேனர் கட்ட அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் கூட, அரசியல்வாதிகள் பெயர் இடம் பெறவில்லை.