பதிவு செய்த நாள்
24
மார்
2016
01:03
ஓசூர்: ஓசூர் தர்கா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 22 அடி நகர்த்தி வைக்கப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், 3,000கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் தர்கா தேசிய நெடுஞ்சாலையோரத்தில், புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. 25 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையின் குறுக்கே அமைந்திருந்ததால், கோவிலை அகற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. கோவிலை உடனடியாக அகற்றாவிட்டால், இடித்து அகற்றுவோம் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும், கோவிலை இடிக்கக் கூடாது என, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கடைசியில், ஹரியானா மாநிலம், யமுனா நகரை சேர்ந்த ஹவுஸ் லிப்டிங் சர்வீஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின், கட்டிட கலை நிபுணர்கள் உதவியுடன், 22 அடி தூரம் கோவில் நகர்த்தி வைக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த நிலையில், கோவில் புரணமைப்பு பணி தொடர்ந்து நடந்து வந்தன. பணி முடிந்ததால், கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த, 21ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது. 21ம் தேதி மாலை, 5 மணி முதல், இரவு, 9 மணி வரை, சிறப்பு யாகம், 22 ம் தேதி காலை, 9 மணிக்கு, கும்பகலசம் வைத்தல் நிகழ்ச்சி மற்றும் கோமாதா பூஜை, யாக பூஜை நடந்தது. நேற்று காலை, 11.45 மணியளவில், கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.