வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகன் திருவீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2016 11:03
வால்பாறை: பங்குனி உத்திரத்திருவிழாவில் முருகன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலின், 64ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில் சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அண்ணாநகர் சின்னையன் குழுவினர் முருகபக்தர்கள் மற்றும் அண்ணாநகர் இளைஞர் குழுவினரின் சார்பில் நல்லகாத்து ஆற்றிலிருந்து, கோவிலுக்கு பக்தர்கள் சுத்துக்காவடி, அலகு காவடி மற்றும் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அன்னதானம் வழங்கும் விழாவும் நடந்தது. விழாவில், நேற்றுமுன்தினம் இரவு, 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மயில்வாகனத்தில் முருகன் தேவியருடன் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தேருடன் செண்டமேளம், பொம்மலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.