பதிவு செய்த நாள்
26
மார்
2016
12:03
மோகனூர்: கோவிலுக்கு செல்லும் பாதை படுமோசமாக உள்ளதால், அவ் வழியாக சென்று வரும் பக்தர்கள் வாகன ஓட்டிகள் அவஸ்தைப்படுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சி, காளியம்மன் கோவில் தெரு வழியாக, கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில், ராகவேந்திரா சுவாமி கோவில், அசலதீபேஸ்வரர் சுவாமி கோவில் மற்றும் காவிரி ஆற்றுக்கு ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் டூ வீலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர். விசேஷ நாட்களில், அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படும். இந்நிலையில், கடைவீதியில் இருந்து காளியம்மன் கோவில் தெரு, அங்கிருந்து கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். மேலும், நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவங்களும் நடக்கின்றன. இதுகுறித்து, பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். பல்லாங்குழி சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.