பதிவு செய்த நாள்
01
ஏப்
2016
12:04
சேலம்: சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று தீ மிதிவிழா நடந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், நேற்று மதியம் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், சின்ன திருப்பதியில் உள்ள அம்மனுக்கு பூ அலங்கார நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 4 மணியளவில், அம்மன் திருவீதி உலாவாக சின்னதிருப்பதி பெருமாள் கோவில் வரை சென்று வந்தது. அதன் பின், தீமிதி விழா நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடி, மஞ்சள் உடை அணிந்து, அக்னி குண்டம் இறங்கினர். இதனால், கோவில் முன் உள்ள சாலை வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. இரவு புஷ்ப அலங்காரத்துடன் அம்மன் ஊர்வலம் நடந்தது. இன்று மாலை அம்மனுக்கு சந்தனக்காப்பும், வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.