பதிவு செய்த நாள்
04
ஏப்
2016
11:04
ஓசூர்: ஓசூர் அடுத்த, சூளகிரி அருகே, ஒரு மாதத்தில் ஏழு பேர் இறந்ததால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உயிருக்கு பயந்து, கால்நடைகளுடன் வனவாசம் சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, சூளகிரி தாலுகாவுக்கு உட்பட்ட மேலுமலை கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதியில், கடந்த ஒரு மாதத்தில், நோய் மற்றும் விபத்தில் சிக்கி, ஏழு பேர் உயிரிழந்தனர். கடந்த, 29ம் தேதி, சாமியாடிய ஊர் பூசாரி, கிராமத்திற்கு கெடுதல் வந்து விட்டது, தீட்டு ஏற்பட்டதால், அடுத்தடுத்து இறக்கின்றனர். கிராம மக்கள், உடனடியாக வனவாசம் செல்ல வேண்டும் என, கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று காலை 6:00 மணிக்கு, கால்நடைகளுடன், கிராமத்தை காலி செய்த மக்கள், காவல் தெய்வம் மாரியம்மன் சிலையுடன் வனவாசம் புறப்பட்டனர். கிராமத்தில் யாரும் இல்லாத தால், கிராமத்தை சுற்றி முள்வேலி அமைத்து, 20 பேரை காவலுக்கு நியமித்தனர். இரவு 7:00 மணிக்கு, வனப்பகுதியை விட்டு வெளியேறி, கிராமத்திற்குள் வந்தனர்.