திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் வியாகுல அன்னை பேராலய பாஸ்கு திருவிழா ரத பவனி நடந்தது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. 325 ஆண்டு பழமைவாய்ந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பாஸ்கு திருவிழா நடைபெறும். இந்தாண்டிற்கான திருவிழா ஏப்.1ல் துவங்கியது. அன்றிரவு பாஸ்கு மேடையில் இயேசுவின் போதனைகள், புதுமைகள், வேதனைகள், பாடுகள், கல்வாரி மலையில் உயிர்நீத்த காட்சிகள் நடித்துக் காட்டப்பட்டன. நேற்று முன்தினம் (ஏப்., 2ல்) அதிகாலை 5 மணிக்கு திருச்சடல துாம்பா ஊர்வலம் மற்றும் கல்லறையில் அடக்கம் செய்யப்படும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்பு காலை 6 மணிக்கு பாதிரியார் பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி ஆராதனை நடந்தது. இரவு 9 மணிக்கு ‘உயிர்ப்பு பாஸ்கா’ நிகழ்ச்சி நடந்தது. இதில் உதவி பாதிரியார் லியோ ஜோசப் மறையுறை வழங்கினார். ஆடம்பர கூட்டுத்திருப்பலி: நேற்று அதிகாலை 4.30 மணிக்கு பாஸ்கு மேடையில், புனித தோமா அருட்பணி மையத்தின் பாதிரியார் மரிய இஞ்ஞாசி தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. பின், காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி அனுமந்தராயன்கோட்டை பாதிரியார் ஏர்னஸ்ட் அந்தோணிசாமி தலைமையில் நடந்தது.
ரதபவனி: நேற்று காலை 9 மணிக்கு ஏசு கிறிஸ்துவின் ரதபவனியை பரிபாலகர் ஆரோக்கியசாமி துவக்கினார். ரதபவனி திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்துமேட்டுப்பட்டியை அடைந்தது. நேற்று மாலை 6 மணிக்கு ரத பவனி முடிவுற்று நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.