காசியில் டுண்டி ராஜகணபதி கோயில் கொண்டுள்ளார். டுண்டி என்ற சொல்லுக்கு தொந்தி எனப் பொருள். பெருவயிறைக் கொண்டதால் இவர் தொந்தி கணபதி ஆகிறார். அந்த டுண்டியே தமிழில் தொண்டி என திரிந்திருக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டியில் உள்ள விநாயகப்பெருமானும் டுண்டி கணபதியாக பெருவயிறுடன் உள்ளார். ராமபிரான், இங்கிருந்து தான் இலங்கைக்கு பாலம் கட்ட வேண்டுமென திட்டமிட்டார். ஆனால், இங்கு கட்டுவதை விட ராமேஸ்வரம் போனால், இன்னும் எளிது. இலங்கைக்கு விரைவில் சென்று விடலாம், என தொண்டி கணபதி தான் ராமனுக்கு யோசனை சொன்னார் என்கிறது தலபுராணம். இப்படி, ராம பிரானின் வெற்றிக்கு காரணமாக இருந்த இவரை, பெரும் துன்பத்தில் தவிப்பவர்கள் வணங்கினால், சிக்கல் தீர்ந்து நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.