பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
11:04
காஞ்சிபுரம்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலைக்கு பதில், புதிய சிலை செய்ய உத்தரவிட்ட அறநிலையதுறை ஆணையருக்கு எதிராக, பக்தர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
பல்லவர் காலத்தில் உருவான காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், தேவார மூவராலும், மாணிக்கவாசகராலும் பாடல் பெற்ற தலம். அங்கு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் ஐம்பொன் சிலை உள்ளது.
புதிய சிலை: திருவிழாக்களில், இந்த சிலை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறி, புதிய சிலை செய்யப் போவதாக அறநிலைய துறை அறிவித்துள்ளது. பல்வேறு எதிர்ப்புகளால், அந்த பணி இன்னும் துவங்கவில்லை. இந்த நிலையில், காமாட்சி அம்மன் கோவில் பக்தர்கள், 1008 பேர், புதிய சிலை செய்வதை கண்டித்து, இந்து சமய அறநிலைய துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: அறநிலைய துறை ஆணையருக்கு, மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட அனுமதி இல்லை என, அறநிலைய துறை சட்டம் கூறுகிறது. இதை, உச்சநீதிமன்றத்திலும், அறநிலைய துறை உறுதிப்படுத்தி உள்ளது.
மிரட்டல்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலைக்கு பதில், கோவில் செலவில் புதிய சிலை செய்ய யார் அனுமதி கொடுத்தனர்? ஆகமவிதி மீறி, புதிய சிலை செய்யப்படுகிறது. இதில், அர்ச்சகர்கள் மிரட்டப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பழமையான சோமாஸ்கந்தர் சிலையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். புதிய சிலை செய்வதை அறநிலைய துறை கைவிட வேண்டும். ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல், அறநிலைய துறை அதிகாரியே தக்காராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சட்டவிரோதமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.