பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
12:04
திருப்பதி,: திருமலையில், விரைவு தரிசன பக்தர்கள் உடை மாற்ற வசதியாக, புதிய கூடத்தை அமைக்க, தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வி.ஐ.பி., பிரேக் தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், 50 ரூபாய் சுதர்சன தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்போர், சம்பிரதாய உடைகளை அணிந்து வர வேண்டும் என, தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இணையதளம் மூலம், விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து வருவோர், திருமலைக்கு வந்ததும், உடை மாற்றிக் கொள்ள, வாடகை அறைகளில் தங்குகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் போது, அறைகள் பெற சிரமப்படுகின்றனர். அவர்கள் வசதிக்காக, தரிசன வரிசை அருகில், உடை மாற்ற, புதிய கூடத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி வருகிறது. கோடை விடுமுறை காரணமாக, இந்த வாரம் பக்தர்கள் அதிகம் வருவர் என்பதால், ஏப்., 15 முதல், ஜூன், 30 வரை, வெள்ளிக் கிழமைகளில், காலை நேர, வி.ஐ.பி., பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.