புத்தாண்டு தரிசனத்திற்கு வந்த சதுரகிரி பக்தர்கள் ஏமாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2016 12:04
வத்திராயிருப்பு: தமிழ்புத்தாண்டு தரிசனத்திற்காக சதுரகிரி மலைக்கு சென்ற பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தலா 4 நாட்களை தவிர மற்ற நாட்களில் மலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது கடந்த ஒருவருடமாக அமலில் உள்ளது. இவ்விஷயம் தெரியாமல் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விசேஷ நாட்களில் தரிசனத்திற்காக பக்தர்கள் வந்து விடுகின்றனர். அடிவாரத்தில் வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். வெகுதுõரத்திலிருந்து வந்திருப்பதால் தாங்களை அனுமதிக்குமாறு பலர் வனத்துறையினரிடம் கெஞ்சுகின்றனர். சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். இது இங்கு கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. அதன்படி நேற்று தமிழ்புத்தாண்டு தரிசனத்திற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து 300 பக்தர்கள் வந்தனர். வழக்கம்போல வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் ஏமாற்றமடைந்தனர். சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வத்திராயிருப்பிலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு பேசி திருப்பி அனுப்பப்பட்டனர்.