பதிவு செய்த நாள்
16
ஏப்
2016
12:04
அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ஹிந்துக்கள் வழிபடும் மரத்தை, பேணி பராமரிக்கின்றனர். முஸ்லிம்கள்.உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தி என்றதும், பாபர் மசூதி - ராமஜென்ம பூமி பிரச்னை தான் நினைவுக்கு வரும். ஆனால், அதையும் தாண்டி, மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விஷயங்கள் பல உள்ளன. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று, தக்புரா. இங்கு, ராமராம் என்ற மரம் உள்ளது. கல்யாண் என்ற புத்தகத்தில், அயோத்தியில் அசோகவனம் என்ற வனம் இருந்ததாகவும், அதில் ராமராம் என்ற மரம் உள்ளதாகவும் குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. இதை படித்த பண்டிட் அர்ஜுன் பிரசாத் பிஹாரி என்பவர், தக்புரா சென்று, அந்த மரத்தைக் கண்டுபிடித்துள்ளார். அது முதல், அயோத்தி வரும் பக்தர்கள், இந்த மரத்தையும் வழிபட்டு செல்கின்றனர். ஆனால், இந்த மரத்தை பேணி பராமரிப்பதோ, முஸ்லிம் மக்கள். இந்த மரத்தை வணங்கினால் அறிவு வளரும், நிதிப் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை, ஹிந்துக்கள் மத்தியில் உள்ளது. முஸ்லிம்கள் பராமரிக்கும் மரத்தை, ஹிந்துக்கள் வழிபடும், இந்த மத நல்லிணக்கம், அப்பகுதிக்கு செல்லும் பக்தர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.