பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, ஐதீகமுறைப்படி ஏராளமான சிவனடியார்கள் சூலம், இடப முத்திரையை பச்சைக் குத்திக் கொண்டனர். பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் திருவிழாவான நேற்று அப்பர் சுவாமிக்கு சூல இடப முத்திரையிடும் நிகழ்ச்சி நடந்தது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சமண மதத்தில் இருந்த அப்பரை, அவரது சகோதரி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சைவ மதத்திற்கு மாறுமாறு கூறினார். அதன்படி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சைவ மதத்திற்கு மாறிய அப்பர் கைகளில் சூலம் இடப முத்திரையை பச்சை குத்தி, சுவாமியை போற்றி மூன்று பதிகங்கள் பாடினார். இந்த ஐதீக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்த சிவனடியார்கள், சூலம், இடப (காளை) சின்னங்களை கை மற்றும் மார்பில் பச்சை குத்திக் கொண்டனர்.