திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் 17ம் தேதி உறியடி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2011 11:09
ஏர்வாடி : திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் ஆவணி உறியடி உற்சவ திருவிழா மற்றும் கருடசேவை வரும் 17ம் தேதி நடக்கிறது.108 வைணவ திருத்தலங்களில் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலும் ஒன்றாகும். திருக்குறுங்குடி ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை வளங்கள் சூழ நடுவில் கம்பீராக மலைநம்பி கோயில் அமைந்துள்ளது. மலைநம்பிக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் சனிக்கிழமைகளில் குறிப்பாக கடைசி சனிக்கிழமைகளில் அதிகமாக வந்து செல்வர். இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி கடைசி சனிக்கிழமை நடக்கும் உறியடி உற்சவ திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்தாண்டு ஆவணி மாத உறியடி உற்சவ திருவிழா வரும் 17ம் தேதி நடக்கிறது. அன்று காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடக்கிறது. அதன்பின் ராமானுஜ ஜீயர் மடத்து பரம்பரை தலைவர் அழகியநம்பி பாண்டிய தலைவர் குடும்பத்தாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. மாலை 4 மணிக்கு கண்ணன் சேவா சங்கத்தின் சார்பில் உறியடி உற்சவ திருவிழா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சாயராட்சை பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு மலைநம்பி சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். ஏற்பாடுகளை திருக்குறுங்குடி ஜீயர்மடம் பவர் ஏஜன்ட் ஸ்ரீநிவாசன், மேலாளர் திருநாராயணன், பரம்பரை தலைவர் அழகியநம்பி பாண்டிய தலைவர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.