பதிவு செய்த நாள்
02
செப்
2011
11:09
புதுச்சேரி : தூய இருதய ஆண்டவர் ஆலயம் பசிலிக்காவாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அர்ப்பணிப்பு விழா இன்று நடக்கிறது. இதுகுறித்து தாமஸ் அடிகளார் கூறியதாவது: தூய இருதய ஆண்டவர் ஆலயம் பசிலிக்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாகும். இதன் முறைப்படியான அறிவிப்பும், அர்ப்பணமும் இன்று நடக்கிறது. காலை 5.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் யுவான் ஆம்புரோஸ், பகல் 12 மணிக்கு முன்னாள் பேராயர் மைக்கேல் அகஸ்டின், மாலை 5.30 மணிக்கு திண்டிவனம் நடுநிலையத்தின் இயக்குனர் அல்போன்ஸ் அடிகளார் ஆகியோர் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றுகின்றனர். இரவு 7 மணிக்கு போப்பாண்டவரின் இந்தியத் தூதர் சால்வாத்தோரே பெனாக்கியோ பசிலிக்காவிற்கு முறைப்படியாக வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஆவணத்தை லத்தீனில் வாசிக்க பேராயர் ஆங்கிலத்தில் வாசிக்க முறைப்படியான அறிவிப்பும், அர்ப்பணமும் நடக்கிறது. நாளை (3ம் தேதி) இந்தியத் தபால்துறை உயர் செயலர் ராதிகா துரைசாமி சிறப்புத் தபால் உறையை வெளியிடுகிறார். 4ம் தேதி மாலை 7.15 மணிக்கு புதுச்சேரி கவர்னர், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு, பேராயர் ஆனந்தராயர் முன்னிலையில் பசிலிக்கா நினைவு மலர் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளி தாளாளர் லூர்துசாமி, துணைப் பங்குத் தந்தை குழந்தைராஜ், அருட்பணி உதவியாளர் சார்லஸ் கோலன், பேரவை நிர்வாக உறுப்பினர் கள் வின்சென்ட்ராயர், நாதன், ஜோசப் ராஜ்ழிலோன் ஆகியோர் உடனிருந்தனர்.