திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருவேங்கடபுரம். இங்குள்ள பொன்னியம்மன் மேற்கு பார்த்தபடி தரிசனம் தருகிறாள். வேம்பும், அரசும் அருகருகே இருக்க இங்குள்ள புற்றில் சுயம்புவாகத் தோன்றிய அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். ஆதிகாலத்தில் அம்மனுக்கு கிடாவெட்டி படையிலிட்டு வழிபட்டனர். கோயில் திருவிழாவின் போது அசைவப்படையல் கூடாது என அம்மன் சொல்லிவிட, அன்று முதல் அசைவப்படையல் நிறுத்தப்பட்டது என்கின்றனர். மேலும் சர்க்கரைப்பொங்கல் படையலிட்டு வேண்டிக் கொண்டால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். கூழ் ஊற்றி, நெய் விளக்கேற்றிப் பிரார்த்தித்தால் இல்லத்தில் நிம்மதியும் சந்தோஷமும் தங்கும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் இங்குள்ள வேப்பமரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் மஞ்சள் சரடை கட்டினால் திருமணம் விரைவில் கைகூடும் என்பதும் இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.